இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, இந்த ஆண்டு இறுதியில் இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக யோமியுரி ஷிம்பன் என்ற ஜப்பானிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிவது போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இந்தக் கூட்டத்தில், கடன் பொறியைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவதன் மூலம் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் மாத இறுதியில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஏனைய தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போது ஜப்பானிடம் உதவி கோரியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் கடன் மீளளிப்பை குறைப்பது மற்றும் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை ஒத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிக்கலைக் கையாள்வதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்க மற்ற கடன் வழங்கும் நாடுகளிடம் ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.