நியூஸிலாந்தின் Auckland நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூஸிலாந்தின் Auckland நகரில் மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் ஆரம்பமாகவிருந்த சில மணி நேரத்திற்கு முன்னர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதலை பயங்கரவாதத் தாக்குதலாக கருத முடியாது எனவும் கால்பந்தாட்டத் தொடர் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும் அந்நாட்டின் பிரதமர் கிரிஸ் ஹிப்கின்ஸ்(Chris Hipkins) தெரிவித்தார்.
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என தெரிவித்த பிரதமர், மக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக செயற்பட்ட பொலிஸாரை பாராட்டியுள்ளார்.
இதேவேளை, FIFA மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளும் அதிகாரிகளும் பாதுகாப்பாக இருப்பதாக Auckland மேயர் Wayne Brown தெரிவித்துள்ளார்.
FIFA மகளிருக்கான 9 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து மற்றும் நோர்வே மகளிர் அணிகள் மோதவுள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் Grant Robertson தெரிவித்துள்ளார்