ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இந்த நிலையில் அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரம் பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, இந்தியா முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டில்லியில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று காலை டில்லி ராஜகாட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு உலகத் தலைவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் உலகத் தலைவர்கள் மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்துக்கு சென்றனர். அங்கே அவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் ஜி – 20 உச்சி மாநாட்டில் முக்கிய கருத்தரங்குகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக ஜி-20 கூட்டமைப்பின் அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார். இதன்போது உரையாற்றிய அவர் , டிசம்பர் மாதம் வரை ஜி20 தலைமைப் பொறுப்பில் இருப்பதால் நவம்பரில் காணொளி மூலமாக ஒரு கூட்டத்தை நடத்த விரும்புகிறேன் என்று அறிவித்தார். பின்னர் ஜி20 கூட்டம் நிறைவு பெறுகிறது என்று பிரதமர் மோடி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.