அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 1 கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் உதயநிதி செப்டம்பர் 7 ஆம் திகதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கை தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உள்ளது. எனவே, தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.