உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் பல இடங்களிலும் பரவலாக வெள்ளநீர் தேங்கியுள்ளது. தலைநகர் லக்னோ, பாரபங்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் சராசரியாக 40 மில்லி மீற்றர் அளவு மழை பதிவாகியுள்ளது. மொரதாபாத், சம்பல், கனோஜ், ராம்பூர், ஹத்ராஸ், பாராபங்கி, காசிகஞ்ச், பிஜ்னோர், அமோரா, பராயிச், லக்னோ, பதான், மயின்புரி, ஹர்தோய், ஃபிரோஸாபாத், பரேலி, ஷாஜஹான்பூர், கான்பூர், சிதாபூர், ஃபரூக்காபாத், லக்கிம்பூர் கேரி, ஃபதேபூர் போன்ற இடங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் நாளை வரை இந்தியா முழுவதும் பரவலாக தமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஒடிசாவில் ஆங்காங்கே கனமழை முதல் மிககனமழை வரை பெய்யக்கூடும். உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.