அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் எதிர்வரும் 3 ஆம் திகதி அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அண்ணா பற்றி சமீபத்தில்அண்ணாமலை பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, டில்லியில் அமித்ஷாவை, பழனிசாமி சந்தித்தார். அப்போது, அ.தி.மு.கவினரை அண்ணாமலை விமர்சித்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பழனிசாமி பேசினார்.
இதையடுத்து, சென்னையில், கடந்த 25 ஆம் திகதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்டசெயலாளர்களுடன் பழனிசாமி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.அதில், பா.ஜ.கவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது என தீர்மானம்நிறைவேற்றப்பட்டு அ.தி.மு.க. சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில், பா.ஜ.கவன் முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,‘புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்’ என நேற்று பதிவிட்டுள்ளார்.
மேலும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இன்றி, இனி வரும் தேர்தல்களை பா.ஜ.க. தனித்து எதிர்கொள்ளும் என பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ‘என் மண் என்மக்கள்’ பாத யாத்திரையில் இருக்கும் அண்ணாமலை, பாதயாத்திரையை இடையில் நிறுத்திவிட்டு, ஒக்டோபர் 3 ஆம் திகதி சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. – அ.தி.முககூட்டணி முறிவால், அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை, அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, ஏனைய கட்சிகளுடனான கூட்டணி நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன என்று பா.ஜ.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்பை அண்ணாமலை வெளியிட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.