இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அவரது உடலை தூக்கிச் சென்ற உறவினர்கள் அவரின் தேசிய விருது பெற்ற பாடலை பாடியபடியே கொண்டு சென்றனர்.
பவதாரிணியின் உடல் தேனி அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி மாலை காலமானார். அவரின் உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை வரை மக்கள் அஞ்சலிக்காக தியாராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை அவரது உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது . கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன் மற்றும் இளையராஜாவின் உறவினர்களும் தேனிக்கு சென்றனர் .
விமானம் மூலம் மதுரைக்கு சென்ற இளையராஜா பின்பு காரில் நேற்று பிற்பகலில் லோயர்கேம்ப் சென்றார். இறுக்கத்துடன் மனவேதனையில் இருந்த இளையராஜாவுக்கு பாரதிராஜா ஆறுதல் கூறினார்.
தேனி, லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை தோட்டத்தில் பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் பவதாரிணி உடல் சாந்தி அடைய ஓதுவார்கள் மூலம் திருவாசகம் பாடப்பட்டது. தொடர்ந்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.