திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஆற்றில் பாய்ந்த நிலையில் ட்ரோன் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் கல்முனை தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் கடந்த காலங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நேற்று பொலிஸ் குழு நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை பகுதிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் நேற்று முற்பகல் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 40 வயதுடைய சந்தேக நபரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு தயாரான நிலையில் சந்தேக நபர் தம்வசம் இருந்த தங்க சங்கிலியை ஆற்றில் எறிந்து தானும் அதில் குதித்து மாயமாகியுள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டதுடன் பின்னர் கடற்படையினர் ட்ரோன் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் பொலிஸார் விசாரணைகளுடன் நேற்று மாலை வரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்