deepamnews
இலங்கை

தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யுங்கள் – மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தல்.

நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையும், அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளின் உரையும் இடம்பெற்றது.

இந்த நிலையில், இந்தியா சார்பில் பேரவையில் மணி பாண்டே உரையாற்றுகையில், அயல்நாடு மற்றும் நெருங்கிய நட்புநாடு என்ற ரீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் நிவாரணம், புனர்வாழ்வளித்தல், மீள்குடியேற்றம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் ஆகியவற்றை முன்னிறுத்திய இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவந்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு சுமார் 4 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய உதவிகளை இந்தியா வழங்கியிருக்கின்றது.

இந்தியா எப்போதும் இரண்டு அடிப்படைக்கொள்கைகளின் பிரகாரமே செயற்பட்டுவருகின்றது. நீதி, சமத்துவம், கௌரவம், சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவையே அவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்றும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தல் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் போதுமானவையாக இல்லை. ஆகவே அனைத்துப் பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான தமது கடப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ் நகரில் திடீரென பற்றியெரிந்த வாகனம்!

videodeepam

உள்ளூராட் தேர்தலுக்கான நிதியை மறுத்தால் நீதிமன்றம் செல்வோம் என்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார

videodeepam

யாழில் நாளை கவனயீர்ப்பு போராட்டம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

videodeepam