இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான சிங்கள அரசு தண்டிக்கப்பட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெசன்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
‘‘கனடா பிரதமர் ஜஸ்டின் துரூடோ கடந்த வருடம் கனடா நாடாளுமன்றில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் ஒன்றினை கனடா நாடாளுமன்றில் நிறைவேற்றினார்கள் அதை இந்த ஆண்டு மே 18ஆம் திகதி அவர் நினைவுப்படுத்தி பேசினார்.
ஆத்திரமுற்ற சிங்கள அரசு கனடா நாட்டு தூதுவரை அழைத்து ‘எங்கள் நாட்டு பிரச்சினையில் நீங்கள் இப்படி தலையிடுக்கின்றீர்கள் என்று தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தார்கள்‘ ஆனால் கனடா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை.
எப்படி அல்பேனியாவில் நடந்த படுகொலைக்கு ஜேர்மனிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ, அதே போல கனடா நாடாளுமன்றில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்