எரிபொருளின் தரம் குறித்து, நுகர்வோரின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் ஆய்வுக்காக மாதிரிகளைச் சேகரிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மாத்திரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தரம் குறைந்த பெற்றோல் மற்றும் டீசல் தொடர்பாக, 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தெரிவித்தார்.
“நாட்டில் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 100 இடங்களில் இருந்து 100 புகார்களைப் பெற்றால், இந்த நிலையங்களில் சுமார் 10 சதவீதம் தரம் குறைந்த எரிபொருளைக் கொண்டுள்ளன.
சில வாடிக்கையாளர்கள் எரிபொருளில் இருந்து வரும் துர்நாற்றம் குறித்து முறைப்பாடு அளித்துள்ளனர்.
சிலர், லிட்டருக்கு பயணம் செய்யக் கூடிய தூரத்தின் அளவு குறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
எரிபொருட்கள் ஒதுக்கீட்டு அளவுக்கு ஏற்ப விற்கப்படுவதில்லை என்றும் சிலர் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு, முறைப்பாடுகளை விசாரிக்கத் தீர்மானித்துள்ளதுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும்.
அனைத்து மாதிரிகளையும் ஆய்வு செய்து, ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து கூடிய விரைவில் அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும், ஜனக ரத்நாயக்க கூறினார்.