இலங்கைக்கான நிதியுதவிக்கு, சர்வதேச நாணய நிதிய சபையின் அனுமதியைப் பெறுவதற்கு அரசாங்கம் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நிபந்தனைகளில் இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்து உத்தரவாதங்களைப் பெறுதல் மற்றும் தனியார் துறைக் கடனைக் கையாள்வது ஆகியன அடங்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துணை இயக்குநர், அன்னே-மேரி குல்டே, தெரிவித்துள்ளார்.
“இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.
துன்பங்களை, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களின் துன்பங்களுக்கு முடிவுகட்ட மிக வேகமாக செயல்பட முடியும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம்.
சர்வதேச நாணய நிதிய சபைக் கூட்டத்துக்குப் பின்னர் தான் திட்டத்தின் ஆரம்பப் பணம் வழங்கப்படும்.
இந்தநிலையில் இலங்கையின் கடன் தாங்க முடியாததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி உதவியை சபை அங்கீகரிக்க, எங்களுக்கு இரண்டு குறிப்பிட்ட நிதி உத்தரவாதங்கள் தேவைப்படும்.
முதலாவதாக உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களிடமிருந்து, திட்டத்தின் சூழலில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான உத்தரவாதம் எங்களுக்குத் தேவைப்படும்.
அடுத்து, தனியார் துறையின் கடனைச் சமாளிக்க நல்ல நம்பிக்கையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதற்கான உத்தரவாதம் எங்களுக்குத் தேவை.
இந்த கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை தற்போது தமது சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
கடன் பேச்சுவார்த்தையின் செயல்முறை நேரத்தை எடுத்துக் கொள்வதால் காலக்கெடுவைக் கணிப்பது கடினம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டாலும், இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.