சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான அவ்வாறான 90 பெண்கள் தற்போது ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் கண்காணிப்பில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தூதரகத்தினால் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடமொன்றின் வீட்டிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் 90 பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அந்த வீட்டில் இல்லை என அங்கிருந்து வந்த பெண் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட வெவ்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான பெண்கள், தூதரகத்தின் கண்காணிப்பின் கீழுள்ள பாதுகாப்பு இல்லத்தில் மீண்டும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றமை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
ஓமானில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான பெண் ஒருவர் தற்போது அனுராதபுரத்தில் உள்ளார்.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் ஒருவர், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள பெண்களை பணத்திற்கு விற்பதாக அப்பெண் குற்றம் சாட்டினார்.