உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. தேர்தலை நடத்துவதில் காணப்படும் சிக்கல்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் நீக்கிக் கொள்ளவே எதிர்பார்ப்பதாக நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
தேர்தல் தொடர்பாக சில விடயங்களை ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. இந்த விடயத்தை மையப்படுத்திய புதிய சட்டங்கள் பலவற்றை கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.
உள்ளுராட்சி மன்றங்களில் தற்போது 8500 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஆரம்பத்தில் 4000 மாக மாத்திரமே காணப்பட்டது. கடந்த ஆட்சி காலங்களில் இந்த எண்ணிக்கை 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர் தெரிவு , உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு சாதகமான தீர்வாக அமையும்.
உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இவ்வாறு பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.