திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சீமான் நீதிமன்றில் முன்னிலையாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். அப்போது விமான நிலைய வளாகத்தில் இருகட்சி தொண்டர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக விமான நிலைய காவல்துறையினர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 14 பேர் மீதும், ம.தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றில் முன்னிலையானார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் கட்சி வாக்கு சதவீதத்தை 8-லிருந்து 15 ஆக உயர்த்தினால் தான் காசு கொடுக்காமலும் ஓட்டு பெற முடியும் என்ற நம்பிக்கையில் எங்களுடன் இணைவார்கள். பிரதமரை விமர்சிக்கவே கூடாதா?.
அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?. அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு தண்டனை விதித்து இருப்பதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும்.
கடந்த தேர்தலின்போதும், இதுபோல் ஒரு அணியை உருவாக்க முயற்சித்தார்கள். பின்னர் அந்த கூட்டணி சிதறுண்டுபோனது என்று தெரிவித்தார்.