சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளார்.
ஊழல்வாதிகள், திருடர்கள், குடும்ப அரசியல் இல்லாமல் சுத்தமானவர்களைக் கொண்டு அந்த அராங்கத்தை உருவாக்குவதே நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள ஒரே வழி என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவரேனும் ஜனாதிபதி பதவியை வெல்வதை இலக்காகக் கொண்டு செயற்பட்டால் அதனை செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் இன்று பொதுஜன பெரமுன நடத்திய ஊடக சந்திப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
கட்சி, நிறம் என்று பிரிந்து நின்று கூச்சலிடுவதற்கு பதிலாக, தேர்தலை நடத்துமாறு வீதியில் இறங்கி கோஷமிடுவதற்கு பதிலாக, ஏதேனும் ஒரு முறையில் எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக, அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பதற்கு பதிலாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி குறிப்பிட்டார்.
அனைவரும் பொறுப்புகளை ஏற்று செயற்பட வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாகக் கூறிய திஸ்ஸ குட்டியாரச்சி, ஜனாதிபதி தொடக்கம் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் அதற்காக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
அனுரகுமார திசாநாயக்க சிறப்பாக செயற்படக்கூடிய ஒருவர் என்றால், அவருக்கு ஏதேனும் ஒரு உயர் பதவியை வழங்கி, அவரது சேவையை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.