20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் உருவாக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தவிர, இதர மாநகராட்சிகளுக்கு புதிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்தான தமிழக அரசின் அரசாணையில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது,
மாநகராட்சிகளில் தோற்றுவிக்கப்படாத நகராட்சி பணியிடங்களை மாநகராட்சி பணியிடங்களுக்கு இணையாக எவ்வாறு பொருத்துவது என்பது குறித்தும், பொது அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சிகளில் வார்டு அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்களை மறுசீரமைத்தல் தொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் ஒவ்வொரு மாநகராட்சியும் புதிய பணியிடங்களாக (1) பணியாளர் பிரிவு (2) வருவாய் மற்றும் கணக்கு பிரிவு (3) பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு (4) பொது சுகாதாரப் பிரிவு ஆகிய 4 பிரிவுகளைக் கொண்டு இயங்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்கவும் மற்றும் முறைப்படுத்தவும் தற்போது அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.