ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக ஆளுநராக இதுவரை முடிவெடுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன், கடந்த மே மாதம் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு நாம் தமிழர் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து, நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாமகவின் முன்னாள் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தன் டுவிட்டர் பதிவில், இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.