இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்குத் தேவையான காணிகளை அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.