deepamnews
இலங்கை

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும்

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்து புனித பிரதேச பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் வைத்திலிங்கம் ஜெகதாஸ் அவர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணையே இவ்வாறு இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொல்பொருள் என்று கூறிக்கொண்டு பல்லாயிரம் ஆண்டு கால சைவத்தமிழ் வரலாறுகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளால் இன,மத முரண்பாடுகளை தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்த முனைகின்றது இதனை அனுமதிக்க முடியாது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. ஆகவே உடனே அதை தடுத்து நிறுத்தி இந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக மாற்றப்பட வேண்டும்.

இலங்கையின் மிக தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருகோணமலை திருக்கோணேஷ்வரர் ஆலயம் சைவத்தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று நிலம்.

அந்த ஆலயம் சூழ்ந்த இடங்களில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்கப்பட்டு தொல்லியல் திணைக்களத்தினால் சில தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்க பட்டுவருவதும் ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை வேதனை அடையவைத்திருக்கின்றது.

தொல்பொருள் திணைக்களம் ஒரு ஆலய விடயத்திற்குள் தலையிடுகின்றது என்றால், நிச்சயம் அங்கு ஒரு இரகசிய வேலைத்திட்டமிருக்கும். இந்த பின்புலத்தை நோக்கினால், திருகோணேஸ்வர ஆலயத்தை உள்ளடக்கியவாறு, உல்லாசத்துறை அபிவிருத்தியென்னும் பெயரில் தொல்பொருள் திணைக்களம் நுழைவதானது, நீண்டகால அடிப்படையில் கோணேசர் ஆலயத்தை விழுங்கும் ஒரு செயற்பாடுதான்.

ஏனெனில் உல்லாசத்துறை அபிவிருத்தியை செய்வதற்கு பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது, குறிப்பாக கோணேசர் ஆலயப்பகுதியை தெரிவுசெய்ய வேண்டிய அவசியமென்ன? எனவே அங்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும்.

கோணேசர் கோயிலில் திட்டமிட்டு நிறுவப்படும் பௌத்த மயமாக்கல் சிங்கள குடியேற்றங்கள் என்பனவற்றை தடுத்து ஆலய வளாகத்தை சூழ உள்ள பிரதேசங்களை புனித பிரதேசமாக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே இச் செயலினை கௌரவ சபை கண்டிப்பதுடன் இக் கண்டன தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி ,பிரதம மந்திரி தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

ஜெனிவாவில் இலங்கைக்கு 11 வாக்குகளே கிடைக்கும்

videodeepam

இலங்கையின் கடன் தொடர்பான பத்திரத்திற்கு உத்தரவாதம் வழங்கியது சீனா

videodeepam

மோடியை ஒன்றாகச் சேர்ந்து சந்திக்க முயல்வோம் வாருங்கள்…! தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு.

videodeepam