இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால் அது, இன அழிப்பிற்கு உள்ளான இனத்திற்கு உலகம் செய்யும் துரோகமாக கருதப்படும்.
புரையோடி போயுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி இதயச்சுத்தியுடன் செயற்படுவாராயின் சமஷ்டி அடிப்படையில் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்காமல் சர்வதேசம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால் இது இன அழிப்புக்கு உள்ளான தமிழ் சமூகத்திற்கு உலகம் இழைக்கும் துரோகமாக கருதப்படும்.
வடக்கு தமிழ் அரசியல் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டார், ஆனால் அதற்கான நடடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதயச்சுத்தியுடன் உள்ளாராயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தலைவர் இரா.சம்பந்ததின் காலத்தில் ஒரு தீர்வை எட்டாவிட்டால், தற்போதைய பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.