நகரங்கள் இல்லாத கிராமப் புறங்களுக்கு எந்த அடிப்படையில் நிதியொதுக்கீடு கிடைக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.
நகர அபிவிருத்திக்காக பிரயத்தனம் மேற்கொள்ளும் அரசாங்கம் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
சாணக்கியன் இராசமாணிக்கம் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் நகரங்களை காண முடியாது.நகரங்கள் இருந்தால் தான் நகரங்களை அபிவிருத்தி செய்யலாம்.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாத்திரம் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நகரங்கள் இல்லை.
நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒருபகுதி கூட கிராமிய அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவில்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை,எழுவான் கரை ஆகிய பிரதேசங்கள் உள்ளன.
எழுவான்கரை பிரதேசத்தில் நகரங்கள் இல்லை.2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதேச அபிவிருத்திக்கு இரு பிரதிநிதிகளையும்,அரசியல் உரிமைக்காக இரு பிரதிநிதிகளையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
காணி அபகரிப்பு,அரசியல் கைதி விடுதலை,சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து எமக்கு மக்கள் வழங்கிய பொறுப்பை முறையாக செயற்படுத்தி வருகிறோம்.ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.