deepamnews
இலங்கை

சூறாவளியினால் இருவர் பலி, மூவர் காயம் –  அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல  இடங்களிலும் ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்று வீசுகின்ற அதே வேளை கடுமையான குளிரும் நிலவுகிறது.

வலப்பனை பிரதேசத்தில் ருப்பஹா, மடுல்ல, உடப்புஸலாவை, கல்கடப்பத்தனை, தெரிப்பே, ஹரஸ்பெத்த, இராகலை, புரூக்சைட், கந்தப்பளை ஆகிய பிரதேசங்களில் வீசும் கடும் காற்றினால் வீதியோரங்களில் பாரிய மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இராகலை புரூக்சைட் பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் வீழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்துடன் உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உடப்புஸ்ஸல்லாவ கல்கட பத்தனையில் வீடு மீது பாரிய மரக்கிளை வீழ்ந்து ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

வலப்பனை-நில்தண்டாஹின்ன ரூப்பஹா மற்றும் உடப்புஸலாவை -மடுல்ல பிரதேச பிரதான வீதிகளில் பாரிய மரங்கள் வேருடன் சரிந்து மின் கம்பங்கள் முறிந்துள்ளது.

வீதி போக்குவரத்தை சீர்செய்ய அங்கு மரங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வலப்பனை பிரதேசத்திற்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மேலும் உடப்புஸ்ஸல்லாவ-மெத்திவரன நிவாச பகுதியில் வீடொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வலப்பனை பிரதேசத்தில் வீசும் பலத்த காற்றினால் அனர்த்தங்களை பல இடம்பெற்று வருகிறது.

பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கந்தப்பளை -இராகலை வீதியில் கொங்கோடியா பகுதியில் பிரதான வீதியில் முறிந்து வீழ்ந்த மரத்தின் அகற்றும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், இராகலை உயர் நிலை பாடசாலையின் கட்டடம் ஒன்றின் மீது பாரிய மரம் வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கட்டடத்தில் பயிலும் உயர்தர மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு பாதிப்பில்லை என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று  நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் காலநிலை குறித்து கேட்டறிந்ததன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பலம் வாய்ந்த ராஜ்ஜியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் தலையிடும் வாய்ப்பு இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின்  உதவியுடனோ, இல்லாமலோ நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

videodeepam