தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை அவசியம் என்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.
இலங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை விடயங்களையும் இந்தியா நன்கு அறிந்துள்ளது.
குறிப்பாக, 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் விவகாரம் சம்பந்தமாக இந்தியா விசேடமாக கரிசனை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது.
அதன் பின்னரான காலத்திலும், தமிழ் மக்களின் விவகாரங்களில் இந்தியா முழுமையான பங்களிப்பினை செய்தே வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் பங்களிப்பினை புதிதாக கோரவேண்டியதில்லை.
தற்போது தமிழர் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின்போதும் இந்தியாவின் வகிபாகம் நிச்சயமாக இருக்கும்.
தற்போதைய சூழலில் அந்த வகிபாகம் எவ்வாறானது என்று வரையறுக்கப்படாவிட்டாலும், நிச்சயமாக இந்தியா தனது பாத்திரத்தினை முக்கியமானதாக வகிக்கவுள்ளது.
அந்த வகையில், தமிழ் மக்கள் தமது நியாயமான அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா நிச்சயமாக தனது பங்களிப்பை பூரணமாகவும் அர்ப்பணிப்புடனும் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.