சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது.
கடந்த 2 நாட்களில் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்துக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளில் 0.5 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஜெனஸ்டிரிங்ஸ் டயகனாஸ்டிக் மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துவரும் ஜெனஸ்டிரிங்ஸ் டயகனாஸ்டிக் சென்டர் என்ற மருத்துவ மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை தொடங்கினோம். அன்றைய தினத்தில் மட்டும் 110 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் 25-ம் தேதி 345 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 0.5 சதவீதம் பேருக்கும் குறைவான நபர்களே கொரோனாதொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கடந்த 2021-ல் இதேபோன்ற பரிசோதனை நடத்தப்பட்டபோது 5 முதல் 6 சதவீதம் பேருக்கு கொரோனா இருந்தது. டெல்லி விமான நிலையத்தில் தினந்தோறும் சராசரியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர். இதில் 2 சதவீதம் ரேண்டம் மாதிரி பரிசோதனை செய்ய உத்தரவு வந்துள்ளது. அதன்படி சுமார் 500 பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. கரோனா பரிசோதனை செய்ய கூடுதல் அதிகாரிகளை நியமித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.