சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவராண்மை அமைப்பு வழங்கும் நிதியின் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் TSP உரத்தை இலவசமாக விநியோகிக்க ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
2022-2023 பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நிலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நெற்செய்கையாளருக்கும் வழங்கப்படும் TSP உரத்தின் அளவு தீர்மானிக்கப்படுமென US AID அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உரத்தின் அளவை தீர்மானிக்கும் போது இம்முறை பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள நிலத்தின் அளவு தொடர்பான தகவல்கள், விநியோகப் பட்டியலுடன் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்படும் அனைத்து விவசாய சேவை மத்திய நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய அனைத்து நெற்செய்கையாளர்களும் சம்பந்தப்பட்ட விவசாய சேவை நிலையங்களுக்குச் சென்று தத்தமது விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதா என ஆராயுமாறு உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி வரை அனைத்து விவசாய சேவை மத்திய நிலையங்களிலும் விநியோக பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
உரம் விநியோகிக்கும் திகதி எதிர்காலத்தில் விவசாய சேவை மத்திய நிலையங்களுக்கு அறிவிக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கின்றது.