கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்தோம் இருப்பினும் பிரதான நிலை கடன் வழங்குநர்களின் கடன் காப்புறுதி கிடைப்பனவில் தாமதம் ஏற்ட்டதால் எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் அல்லது இறுதி பகுதியில் நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும் என உத்தேசித்துள்ளோம்.
அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒருசில தவறான கருத்துக்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தாக்கம் செலுத்தின.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களான இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது. எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இந்தியா,ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம்.
அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் குறைந்தபட்சம் 10 பில்லியன் செலவாகும்.
அரச சேவையாளர்களுக்கு சம்பளம்,சுகாதாரம் உட்பட நலன்புரி சேவைகளுக்கு ஒரு மாதத்திற்கான நிதியை திரட்டிக் கொள்வது சவாலாக உள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு ஒப்பீட்டளவில் தீவிரமடையும் என்று தெரிவித்துள்ளார்.