உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நிதி ஒதுக்குவதில் நெருக்கடி உள்ளது என திறைச்சேரி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும், தேர்தலை நடத்துவதற்கான நிதி 2023ஆம் ஆண்டு வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி, உள்ளூராட்சி மன்றங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் சிக்கல் காணப்படுவதாக திறைச்சேரி அல்லது நிதி அமைச்சு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேவையான மானியத்தை ஒதுக்குமாறு அரசாங்கத்திடம் ஏற்கனவே செலவு மதிப்பீட்டுக்கு அமைய உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம்.
2023ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தேர்தல் செலவுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,ஆகவே தேர்தலை நடத்த அரசாங்கம் நிதி வழங்க வேண்டும்.
வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் தேர்தலை பிற்போட முயற்சிக்கப்படுவதாக அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது,தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.