நாட்டின் ஏற்றுமதியினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3ஆம் கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது.
7 துறைகள் தொடர்பில், இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, வர்த்தக பொருள், வர்த்தக சேவை, முதலீடுகள், சுங்க மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட ஏழு அம்சங்களின் கீழ் குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பண்ட வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, மூல விதிகள், சுங்க ஒத்துழைப்பு, வர்த்தக வசதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நாட்டை வந்தடைந்தது.
தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அவுரமோன் சுப்தாவிதும் தலைமையிலான இந்தக் குழுவில் 26 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.