காவல் துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டம், பிரஜாராஜ் நகர் பகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அவர் காரை விட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். நான்கு முதல் ஐந்து முறை அவர் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சரிந்து கீழே விழுந்தார்.
இந்தச் சம்பவத்தின்போது உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீதும் கோபால் தாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதையடுத்து காயம்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா கிஷோர் தாஸ், மேல் சிகிச்சைக்காக புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கோபால் தாஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
அமைச்சர் உயிரிழந்ததை அறிந்த முதல்வர் நவீன் பட்நாயக், “நான் மிகுந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் உறைந்துள்ளேன். அவர் எங்கள் ஆட்சி மற்றும் கட்சியின் சொத்து” என தெரிவித்துள்ளார்.