சுதந்திரம் எங்கே’ எனும் தொனிப்பொருளிலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் சிவில் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் மற்றும் பேரணி ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று முன்னெடுக்கப்பட்டது.
சிவில் அமைப்பினர், போராட்டக்கள செயற்பாட்டாளர்கள்,பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்
இதேவேளை, இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சியினை வழங்குமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று பாரிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பேரணி ஆரம்பமாகி பல்கலைக்கழக நுழைவாயிலை சென்றடைந்த போது, பொலிஸாரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், பொலிஸாரின் தடையையும் மீறி பேரணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.
காங்கேசன்துறை வீதியூடாக யாழ். முற்ற வெளியை அடைந்த பேரணி அங்கிருந்து கிளிநொச்சிக்கான பயணத்தை ஆரம்பித்தது.
நேற்று ஆரம்பமான இந்த பேரணி எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.