மருதானை எல்பிஸ்டன் கலையரங்கிற்கு அருகில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற நாள் மற்றும் அதற்கு மறுதினமும் தமது கண்காணிப்பு குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின் அறிக்கை,இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்படவுள்ளதுடன் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரால், மருதானை எல்பிஸ்டன் கலைரயங்கிற்கு முன்பாக கடந்த 3 ஆம் திகதி சுதந்திரத்திற்கான சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் பின்னர் அவர்களை கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வருக்கு நேற்று முன்தினம் மாலை பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.