அரசாங்கத்தின் புதிய வரியை நீதிபதிகளிடம் அறவிட வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்ட இடைக்கால தடையுத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அது தொடர்பில் இடம்பெறும் மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் 6 சதவீதம் முதல் சதவீதம் வரை வரி அறவிடுவதற்கு அண்மையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அந்த தீர்மானத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, நீதிச் சேவை அதிகாரிகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனு காரணமாக அந்த வரியை நீதிபதிகளிடமிருந்து அறவிடுவது இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த இடைக்கால தடையுத்தரவை நீடிக்குமாறு நேற்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித்த ராஜகருணா இறைவரி திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
மனு மீதான விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.