deepamnews
இலங்கை

ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் – கலாசார நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சர் கலாநிதி எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவ்வியஜத்தின் ஓர் அங்கமாக இன்று மாலை யாழிலுள்ள வர்த்தகர்கள் , கல்வியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தரப்பினரிடம் கேட்டறிந்து , அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.

மேலும் , நாளை சனிக்கிழமை யாழ் கலாசார நிலையம் திறந்து வைக்கப்படவுள்ள அதேவேளை, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள 5 மாவட்டங்களும் இணைந்து விசேட வாகன பேரணியொன்றையும் ஏற்பாடு செய்துள்ளன.

சனிக்கிழமை மாலை கலை கலாசார நிகழ்வுகளுடன் முற்றவெளி மைதானத்தில் மக்களுக்கான இந்திய பின்னணி பாடகர்கள் இருவரின் பங்குபற்றலுடன் இலவச இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்த அமைச்சர் எல்.முருகன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.

நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் , ஏனைய பங்குதாரர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்தோடு அவர் வடக்கு மற்றும் கிழக்கில் பல முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, இலங்கை – இந்திய கூட்டாண்மையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களையும் பார்வையிடவுள்ளார். இலங்கை – இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்புக்களின் அடையாளமாக யாழ் கலாசார நிலையம் காணப்படுகிறது. நல்லிணக்க திட்டத்தின் கீழ் கலாசார ஒத்துழைப்புக்களை விரிவாக்கம் செய்வதும் வட மாகாண மக்களின் காலாசார விழுமியங்களை வளர்ப்பதற்கும் இந்த நிலையம் முக்கியத்துவமளிக்கும்.

யாழ் கலாசார நிலைய நிர்மாணப்பணிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோசடியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னர் அதன் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெங்ஷங்கர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

11 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் 600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடம் , நவீன வசதிகளுடனான அரங்கம் மற்றும் நூதனசாலை உள்ளிட்ட விசேட அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகரிக்கும்  வெப்பம் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

videodeepam

யாத்திரை சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் இருவர் பலி – 28 பேர் காயம்

videodeepam

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கும் இணங்க போவதில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam