கடந்த ஆண்டில் தமது வான்வெளியில் 10 தடவைக்கு மேல் அமெரிக்கா பலூன்களை பறக்கவிட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி அமெரிக்கா தனது வான்வெளியில் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் பலூன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதை அடுத்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது சிவில் பலூன் என்று சீனா கூறியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜ தந்திர உறவுகள் மோசமடைந்துள்ளன.
அண்மைய நாட்களில், அடையாளம் தெரியாத பல பொருட்களையும் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா கூறுகிறது.
நேற்று ஊடக சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென் பின், அமெரிக்கா பல வான்வெளி அத்துமீறல்களை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்
“அமெரிக்கா மற்ற நாடுகளின் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைவது அசாதாரணமானது அல்ல” என்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு முதல், அமெரிக்க பலூன்கள் சீன அதிகாரிகளின் அனுமதியின்றி 10 முறைக்கு மேல் சட்டவிரோதமாக சீனாவுக்கு மேலே பறந்துள்ளன.
“சீனாவை தூற்றுவதற்கும் குற்றம் சாட்டுவதற்கும் முன்னதாக ஒரு சுத்தமான சில சுய பிரதிபலிப்புகளை உட்படுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டின் கிழக்குக் கடற்கரையில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று காணப்பட்டதாகவும், அதைச் சுட்டு வீழ்த்துவதற்கு இராணுவம் தயாராகி வருவதாகவும் சீனாவின் அரச ஊடகங்கள் வார இறுதியில் செய்தி வெளியிட்டன.
முதல் பலூன் சம்பவத்தால் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன், பெய்ஜிங்கிற்கு திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்தானது.
எவ்வாறாயினும் சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை.