உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாவிட்டால், உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 20ஆம் திகதி முடிவடைந்த நிலையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாநகர சபைகளின் செயலாளர்கள் மற்றும் மாநகர ஆணையாளர்கள் அந்த நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தநிலையில் உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கூடி முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, தேவையான வாக்குச் சீட்டுகளை அரச அச்சகம் வழங்காததால், தேர்தல் தொடர்பான அஞ்சல் வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணம் செலுத்தாததால், அரசு அச்சக அலுவலர் அந்த நடவடிக்கையை எடுத்தார்.
இதற்கு மத்தியில், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.