இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ரூபாவில் பெறப்பட்ட கடன்களை உள்ளடக்குவது குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் வெளிநாட்டு கடனாளிகளின் நம்பிக்கையை மேலும் வளர்க்கும் நடவடிக்கையாக வெளிநாட்டு கடனாளிகளின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுடன் இணைந்து இது மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த ரூபாய் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்கு மத்திய வங்கிக்கு சொந்தமான திறைசேரி உண்டியல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி கூறுயுள்ளது.
தற்போது, இலங்கை மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களின் மொத்த கையிருப்பில் 62.4 வீதத்தையும், ஊழியர் சேமலாப நிதி போன்ற ஓய்வூதிய நிதிகள் திறைசேரி பத்திரங்களில் 42.7 வீதத்தையும் வைத்துள்ளன.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயல்பாட்டில், இந்த ஆண்டு மே மாதத்திற்குள் இலங்கையின் உள்நாட்டுக் கடனையும், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் வெளிநாட்டுக் கடனையும் மறுசீரமைக்க எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.