பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து அதற்கு மாற்றீடாக பயங்கரவாதம் தொடர்பான குறுகிய வரையறைகளை உள்ளடக்கிய சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக புதிய சட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டின் போது இலங்கையின் ஆறாவது அறிக்கையை மீளாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் இறுதி அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிஸ் கழகத்தின் கோட்பாடுகளுக்கு இணங்கி பணியாற்றுதல், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் வழங்குதல், பொறுப்புகளை நேர்த்தியான முறையில் நிறைவேற்றுவதற்குத் தேவையான விடயங்களை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய, ஒன்பதாவது சரத்தின் பிரகாரம், பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை பரிசோதிப்பதற்காக, அவர்களை தடுத்து வைத்துள்ள இடங்களை சுயாதீனமாக கண்காணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது புதிய அறிக்கையில் 60 பரிந்துரைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய மூன்று விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.