அனைத்து மதங்களும் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றினுள் கிறிஸ்தவ கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்து அமைதியின்மையை ஏற்படுத்தியமை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அச்சுவேலி பகுதியில் போதகர் ஒருவர் பொது மக்களை தாக்கியமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவம் தொடர்பான செய்தி குறித்த ஊடகத்தில் பிரசுரமாகி இருந்தது.
அந்தவகையில் அந்த செய்தியை காரணம் காட்டி, குறித்த ஊடக நிறுவனத்துக்குள் உள்நுழைந்த கும்பல் இவ்வாறு அநாகரிகமாக செயற்பட்டுள்ளது. இது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
அண்மைக் காலமாக தமிழர் தாயகத்தில் மதவாதம் தலைதூக்கியுள்ளது. நினைத்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதும், ஏனைய மதங்களது சிலை வைப்பதும் என நிலமை மோசமாகியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல.
தமிழர்கள் நாங்கள் மதத்தால் முரண்பட்டு சண்டையிடாமல், ஒற்றுமையாக இருந்து எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஊடகம் ஒரு செய்தியை பிரசுரித்தால் அந்த செய்தி பிழையானது என சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்திற்குள் சென்று அடாவடியாக செயற்பட்டு ஊடக சுதந்திரத்திற்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது.
எனவே நாங்கள் அனைவரும் தமிழர் என்ற ரீதியில் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.