கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது அமர்வின் போது ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தகச் சலுகை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளன.
இன்று, வெளிவிவகார அமைச்சில் கூட்டப்படவுள்ள இந்த கூட்டத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பௌலா பம்பாலோனி ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.
இதில் இலங்கை சார்பில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், வர்த்தகம், மற்றும் உணவுப் பாதுகாப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மீன்பிடி, பொதுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தின் கடந்த அமர்வு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பிரசல்சில் நடைபெற்றது.