deepamnews
இலங்கை

வடக்கு சுகாதார பணிப்பாளர்  வெளியேறினார் – ஆளுநர் அதிரடி

வடமாகாண சுகாதார பணிப்பாளர் வடக்கிலிருந்து வெளியேறி மத்திய சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு பொறுப்பான பிரிவுக்கு செல்ல உள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

 வட மாகாண சுகாதார பணிப்பாளராக இருந்த வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் கொழும்பிலிருந்து வடமாகாண சுகாதார பணிப்பாளராக  திலீப் லியனகே மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.

இவருக்கு நியமனம் வழங்கப்பட்ட போது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட நிலையில் ஆளுநரின் அனுமதி கேட்கப்படாமல் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் அவரது நியமனத்தை ஏற்காத நிலையில் வடமாகாண சுகாதார பணிப்பாளர்  வசம் இருந்த நிதி அதிகாரங்களுக்கு ஆளுநர் கட்டுப்பாடு போட்டார்.

இந்நிலையில் வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் வட மாகாண சுகாதார பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திலீப் லியனகேயின் நியமனம் 13ஆவது  திருத்தத்தை மீறுவதாக வடமாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் வட மாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரின் செயலாளருமான கலாநிதி விக்னேஸ்வரனும் வடமாகாண சுகாதார பணிப்பாளரின் நியமனம் சட்ட நீதியற்றது என கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இறுதியாக முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் வட மாகாண சுகாதார பணிப்பாளரான திலீப் லியனகேயின் சம்பளம் மற்றும் அவரது மேல் அதிக கொடுப்பனவு தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில் விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரித்தார்.

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எனது அனுமதியின்றி மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட  நியமனத்தை மீளப் பெறுமாறு எழுத்து மூலம் கடிதம் எழுதிய நிலையில் வடக்கிலிருந்து அவர் கொழும்புக்கு மாற்றப்பட்டார்.

Related posts

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு மக்களிடம் கோரிக்கை

videodeepam

கிளிநொச்சியில் பெண்கள் வன்முறைக்கெதிரான வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

videodeepam

ஹெரோயின் போதைப்பொருள ஊசி மூலம் செலுத்தியவர்.சம்பவ இடத்தில் உயிரிழப்பு – யாழில் சம்பவம் 

videodeepam