2024 ஆம் ஆண்டு ரணில் ஜனாதிபதி, பஷில் ராஜபக்ஷ பிரதமர் என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்து கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான தரப்பினர் செயற்படுவதாக மேலவை இலங்கை கூட்டணியின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மேலவை இலங்கை கூட்டணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட அத்துரலியே ரத்ன தேரர், இவர்கள் இருவரின் ஆட்சியை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட ராஜபக்ஷர்கள் மீண்டும் மக்கள் மத்தியில் செல்வதற்கான பாதுகாப்பான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்துக்குள் நான்கு வேறுபட்ட நிலைப்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
முதலாவது தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இரண்டாவது தரப்பினர் பஷில் ராஜபக்ஷவுக்கும், மூன்றாவது தரப்பினர் நாமல் ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,நான்காவது தரப்பினர் பஷில் ராஜபக்ஷ உட்பட நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பாடும் நிலைப்பாட்டில் உள்ளார்கள்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிக்கவும், அதே ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பஷில் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்று அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.