இலங்கையின் வட, கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் பெரும்பான்மையாகத் தமிழர்களே வாழ்ந்தனர் என்பதை மறுதலிக்கமுடியாதபடி நிரூபிப்பதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும், அவற்றை எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வெளியிடவிருப்பதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வீ.ரவிக்குமார் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு, உரியவாறு வகைப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் இனவழிப்பு தொடர்பான தீர்ப்பாயமொன்று உருவாக்கப்பட்டு, அங்கு இவ்விவகாரம் விசாரணைக்கு எடுக்கப்பட்டால் இதுகுறித்த ஆதாரங்களின்றி இனவழிப்பை நிரூபிக்கமுடியாது.
வட, கிழக்கில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் அங்கு இனவழிப்பு தான் இடம்பெற்றது என்பது அவர்களுக்குத் தெரியும்.
இருப்பினும் அதனை உலகநாடுகளுக்கும், சர்வதேசக்கட்டமைப்புக்களும் தெரியப்படுத்துவதற்கும் நிரூபிப்பதற்கும் அவசியமான ஆழமான ஆய்வுகள், ஆதாரங்கள் மற்றும் தொகுப்புக்கள் என்பன போதுமானவையாக இல்லை.
எனவே இலங்கைவாழ் தமிழ்மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் அங்கு இடம்பெற்றுவரும் காணி மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் அபகரிப்பு உள்ளடங்கலாக இனவழிப்பு தொடர்பில் தொகுத்து ஆவணப்படுத்துவது இன்றியமையாததாகும்.
அதேவேளை வட, கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் பெரும்பான்மையாகத் தமிழர்களே வாழ்ந்தனர் என்ற உண்மையை மறுதலிக்கமுடியாதவகையில் நிரூபிப்பதற்கு ஏதுவான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றோம்.
இதில் திரட்டப்பட்ட முக்கிய விடயங்களை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி பிரிட்டனில் நடாத்தப்படவுள்ள கண்காட்சியிலே தொகுத்து காட்சிப்படுத்த இருக்கின்றோம். அவை நிச்சயமாக உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.