“ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குப் பணம் உண்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லை. இதுவொரு நகைச்சுவை” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமை சர்வதேச மட்டத்தில் கடன் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட ஏனைய நிதி நிறுவனங்கள், நாடுகள் இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானிக்கும்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குப் பணம் உண்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லை. இதுவொரு நகைச்சுவை. இதைச் சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானிக்கும்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவர வேண்டாம் என்று உலக நாடுகள் கூறுகின்றன. அது அந்தளவு ஆபத்தானது. ஜனநாயகத்துக்கு விரோதமானது.
ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக எம்.பியாகுவதற்கு முன்பிருந்தே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு இந்த அரசிடம் கூறி வந்தோம். அப்போது சென்றிருந்தால் நிபந்தனை கடுமையாக இருந்திருக்காது.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்த பின் செல்வதால்தான் நிபந்தனை கடுமையாக உள்ளது. அதை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. நாம் ரணில் செய்கின்ற எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்க்கட்சி கிடையாது.” – என்றார்.