முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் குண்டுவெடிப்பானது அன்றைய ஆளும் தரப்பினரின் அனுதாபத்தை பெறுவதற்கான “உள் வேலை” என இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குறித்த குண்டு தாக்குதலானது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,“முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச செயற்பட்ட போது, அவர் மீது 2006 டிசம்பர் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.
எந்தவொரு பயங்கரவாதியும் திட்டமிட்ட இலக்கில் இருந்து 25 மீற்றர் தொலைவில் தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை, இது அப்போதைய ஆளுங்கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட உள் வேலைத்திட்டமாகும்.
2006 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த குறித்த குண்டுவெடிப்பில் இருந்து கோட்டாபய காயமின்றி உயிர் தப்பினார்.
தாக்குதல் நடந்த உடனேயே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துமாறு அமைதி தூதுவராக இருந்த நோர்வேயை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
போர் நிறுத்தத்தில் இருந்து பின்வாங்கி இறுதியில் மே 2009 இறுதி யுத்தம் நடைபெற்றிருந்தது.” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஏப்ரல் 2006 இல் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.
பின்னர் பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.