ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் மாத்திரம் கோட்டாவில் இடம்பெற்ற மாணவர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
அவீஷ்கர் பயிற்சி மையத்தின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவர் பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பின்னர் அவீஷ்கர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
உடனடியாக பயிற்சி மைய ஊழியர்கள் அந்த மாணவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாணவரின் உயிர் பிரிந்தது.
அத்துடன், சில மணி நேரங்களுக்குப் பின்னர் பிஹாரைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார். அவர் வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார். அந்த வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் பயிற்சி மையத்தில் தேர்வெழுதித் திரும்பியுள்ளார். பின்னர் மாலை 7 மணியளவில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு மாணவர்களும் தமது தற்கொலைக் குறிப்பு ஏதும் எழுதிவைக்கவில்லை.
இதேவேளை, கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களிலும் 3 லட்சம் மாணவர்கள் நீட், உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.