ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், மக்கள் மன்றத்தில் பிரதமரை நோக்கி பல கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது எனவும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் குறித்தும், இதன் பின்னால் அரசியல் பின்னணி ஏதாவது இருக்கிறதா என்றும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அரசியல் பின்னணிக்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை நான் ரொம்ப அமைதியாக கடந்துபோக வேண்டும் என்று நினைக்கிறேன். உலகம் முழுவதும் என்னை நேசிக்கிற பல கோடி குடும்பங்கள் இருக்கின்றன.
எனக்கு ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் என ஒரு குடும்பம் இருக்கிறது. சொந்த பந்தங்கள் இருக்கிறது. எனவே, இதுகுறித்து திரும்பத்திரும்ப பேசிக் கொண்டிருப்பது ரொம்ப கேவலமாக இருக்கிறது. இதில் எனக்கு ஒன்றும் இல்லை. நான் கடந்து வந்துவிடுவேன்.
ஆனால், என்னைச் சார்ந்தவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? எனவே, இதை பேசிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. நான் எவ்வளவோ வலிகளைத் தாங்கி கடந்து வந்தவன். என் இன சாவையே கண்முன் பார்த்தவன். எனவே இதெல்லாம் ஒரு விஷயம் இல்லை. எனவே, அதை விட்டுவிடுவோம், வேறு ஏதாவது பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட பா,ஜ,கவினர் விருப்பம் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், மக்கள் மன்றத்தில் பிரதமரை நோக்கி பல கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது. எனவே, அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அவர் போட்டியிடவில்லை என்றால், நான் போட்டியிடமாட்டேன். அந்தத் தொகுதிக்கு தங்கை ஒருவரை ஏற்கெனவே தேர்வு செய்து வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.