deepamnews
இந்தியா

மாலைதீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 2.27 கோடி ரூபா அபராதம்!

மாலைதீவில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகுக்கு இந்திய மதிப்பில் 2.27 கோடி கோடி அபராதம் விதித்து மாலத்தீவு மீன்பிடி, கடல் வளங்கள் மற்றும் விவசாய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி ஜெயபாலன் என்பவரது விசைப்படகில் 12 மீனவர்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றனர். ஒக்டோபர் 22 ஆம் திகதி மாலைதீவு எல்லை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த மாலைதீவு கடலோர காவல் படையினர், தமது கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தனர் என்று கூறி 12 மீனவர்களையும் கைது செய்தனர். அத்துடன், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மாலைதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து தவகலறிந்த கனிமொழி எம்.பி., சிறை வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப் படகை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே, மாலைதீவு மீன்பிடி, கடல் வளங்கள் மற்றும் விவசாய அமைச்சகத்தில் இருந்து விசைப்படகு உரிமையாளர் அந்தோணி ஜெய பாலனுக்கு அனுப்பிய எழுத்தாணையில், மாலைதீவின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்து, தடை செய்யப்பட்ட மீன் வகைகளை பிடித்துள்ளனர். இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தோணி ஜெயபாலன் கடந்த 29 ஆம் திகதி மாலைதீவுக்கு சென்று அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அப்போது இந்தியாவைச் சேர்ந்த 2 தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒக்டோபர் 19 ஆம் திகதி கடல் நீரோட்டம் காரணமாக படகு மாலைதீவு கடல் எல்லை பகுதிக்குள் நுழைந்தது.

மாலைதீவு கடல் பகுதியில் இருப்பதை உணர்ந்தவுடன், படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக வெளியேறுவதற்கு முயன்றனர். ஆனால், கடல் நீரோட்டம் காரணமாக படகு மீண்டும் மாலைதீவு கடல் பகுதிக்குள் நுழைந்தது, என அந்தோணி ஜெயபாலன் விளக்க மளித்தார்.

மேலும், மீனவர்கள் வீசிய வலை விசைப்படகின் இயந்திரத்தில் சிக்கியதால் மாலைதீவு கடல் பகுதியில் இருந்து வெளியேற முடியவில்லை என்றும் இயந்திரத்திலிருந்து மீன் வலையை அவிழ்க்க 5 மணி நேரம் ஆனது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் கப்பலில் உள்ள 10 மைல் நீளமுள்ள வலைகளை கைமுறையாக மீட்டெடுக்க மேலும் 10 மணி நேரம் செலவானது என்றும் அந்தோணி ஜெய பாலன் தெரிவித்துள்ளார்.

வலையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தற்செயலாக சுமார் 40 சுறா மீன்களைப் பிடித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், மோசமான வானிலைக்கான ஆதாரம் இல்லை என்றும் விசைப்படகு மாலைதீவு கடல் பகுதியில் அனுமதியின்றி மீன்பிடிக்க பிரவேசித்துள்ளது எனவும் 10 தொன் நிறையுள்ள மீன்கள் இருந்தன எனவும் மாலைதீவு அதிகாரிகள் குற்றம் சாட்டினர். .

விசாரணைக்குப் பின்னர், மாலைதீவு கடல் எல்லை பகுதியில் அனுமதியின்றி நுழைந்து சுறாக்களை பிடித்த குற்றத்துக்காக இந்திய மதிப்பில் 2.27 கோடி ரூபாவை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர். இந்த அறிவிப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்தோணி ஜெயபாலன் கூறும் போது, நாங்கள் இப்போது ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்து, விசைப் படகையும், மீனவர்களையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதிசெய்யும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிரு நாளில் போராட்டங்களை அறிவிக்க உள்ளோம் என்று தருவைக்குளம் பங்குத் தந்தை, ஊர் மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இது இந்திய நாடா? ஹிந்தியின் நாடா?’ என சீமான் கேள்வி

videodeepam

13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் – பா.ஜ.க முக்கியஸ்தர்கள் வலியுறுத்தல்

videodeepam

ஜி 20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

videodeepam