காசாவில் அல்-ஃபகூரா என்ற பாடசாலை மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 54 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், போர் தீவிரமடையும் அபாயம் அதிகரித்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் பலமுறை எச்சரிக்கைவிடுத்த போதிலும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவில்லை. அதோடு, ‘போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போரிடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காசாவில் உள்ள பாடசாலைகள், தங்குமிடங்கள், மருத்துவமனைப் பகுதிகள் மற்றும் நோயாளர் காவுவண்டிகள் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காசா நகரில் நேற்று முன்தினம் நோயாளர் காவுவண்டிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காசாவின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒக்டோபர் 7 முதல் 150 துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 27 நோயாளர் காவுவண்டிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் பாடசாலையில் அமர்ந்திருந்த பெண்கள், குழ்ந்தைகள் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் அல்-ஃபகூரா என்ற பாடசாலை மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 231 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே போரின்போது மக்கள் வசிக்கும் பகுதிகள், பாடசாலை, கல்லூரி, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது.
ஆனால், தொடக்கம் முதலே இஸ்ரேல் போர் நெறிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 ஆயிரத்து 200 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தியதால், காசா மீது இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்தது. காசாவின் வடக்கு பகுதியில் கடந்த 7 ஆம் திகதி முதல் வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இரண்டு நாளில் இரு முறை நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போர் குற்றத்துக்கு ஈடான செயல் என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 3 ஆயிரத்து 760 குழந்தைகள் உட்பட 9 ஆயிரத்து 61 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.