deepamnews
இந்தியா

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய  40 பேரை மீட்கும் பணியில் பின்னடைவு

உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கிலோ மீற்றர்  தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 12 ஆம் திகதி இந்த சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆறாவது நாளான நேற்று இந்தப் பணியில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தயாரிப்பு துளையிடும் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை சொருக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியின்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணியை தொடர முடியவில்லை எனத் தெரிகிறது. மேற்கொண்டு முயற்சிகளை மேற்கொள்ள முடியாத காரணத்தால் மீட்புப் பணியில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம் 6 மீட்டர் அளவுள்ள நான்கு குழாய்கள் இதுவரை பொருத்தப்பட்டுள்ளன. இப்படியாக சுமார் 50 மீட்டருக்கு குழாய்களை பொருத்தி, அதன் வழியாக தொழிலாளர்களை வெளியில் கொண்டு வருவதுதான் திட்டம். ஐந்தாவது குழாயை பொருத்த முயற்சித்தபோது பணி நிறுத்தப்பட்டுள்ளது. துளையிடும் இயந்திரம் தரையில் இருந்து விலகியது இதற்கு காரணம் என தெரிகிறது. மீட்பு பணி மேற்கொண்டு வரும் நபர்கள் இந்த இயந்திரத்தை தரையில் இருந்து நகராமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, இயந்திரங்கள் மூலம் சரிந்த மண்ணை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மண் சரிவு ஏற்பட்ட காரணத்தால் அது கைவிடப்பட்டது.

சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக தொடர்ந்து ஒக்சிஜன் செலுத்தப்படுகிறது. மற்றொரு குழாய் வழியாக உணவு பொருட்கள், குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ஜ.க. 2 சதவீத வாக்குகளையே பெறும் – ராகுல் காந்தி தெரிவிப்பு.

videodeepam

கடல் கடந்து கரம் பிடித்த காதலி. கடலூரில் திருமணம்

videodeepam

தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் காற்று மாசுபாடு மேலும் அதிகரிப்பு.

videodeepam